கோவையில் கொடூரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை.. 5 பேரிடம் போலிஸ் தீவிர விசாரணை!
கோவையில் கல்லூரி மாணவர் தாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 மாணவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் மர்ம கும்பலால் தாக்கப்பட்ட 19 வயது கல்லூரி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 5 மாணவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பின்னணி என்ன?
இதுவரை நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில், திங்கள்கிழமை காலை ஒத்தக்கால்மண்டபத்தில் நடைபெற்ற மற்றொரு தாக்குதல் சம்பவத்தின் தொடர்ச்சி என போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதாவது, ஒத்தக்கால்மண்டபம் பூங்கா நகரில் சிவில் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படிக்கும் இளவரசன் (18) என்ற மாணவர் தன் நண்பர்களுடன் வாடகைக்கு ரூம் எடுத்து தங்கியிருந்தார். இந்த சூழலில், ஆகஸ்ட் 10 காலை 5:30 மணியளவில், அங்கு புகுந்த ஒரு கும்பல் மாணவர்களை மிரட்டி தாக்கியதுடன், ஒரு மொபைல் போனையும் பறித்து சென்றது. இது தொடர்பாக செட்டிப்பாளையம் காவல் நிலையத்தில் இளவரசன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், அமுதன் (19) என்ற கல்லூரி மாணவருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, காலை 8:30 மணியளவில், அமுதன் தனது நண்பர் ஸ்ரீமன் (19) என்பவருடன் மளுமிச்சம்பட்டி அருகே கல்லூரிக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, முதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பை சேர்ந்தவர்கள் அமுதனை அடையாளம் கண்டு வழிமறித்தனர். இருவரையும் ஹிந்துஸ்தான் கல்லூரிக்கு பின்புறம் உள்ள மைதானத்திற்கு அழைத்து சென்று சரமாரியாக தாக்கி உள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு பின்னர் அமுதன் காலை 10 மணியளவில் தனது அறைக்கு திரும்பி உள்ளார். ஆனால், மாலை 3 மணியளவில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீஸ் விசாரணை
இந்த தாக்குதலில் காயமடைந்த ஸ்ரீமன் அளித்த புகாரின் பேரில், செட்டிப்பாளையம் காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், பூங்கா நகரில் நடந்த தாக்குதலில் அமுதன் ஈடுபட்டதாக கூறி, அதற்குப் பழிவாங்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.
மேலும், உயிரிழந்த அமுதன் கடந்த மாதம் கல்லூரி விடுதி சமையலரை தாக்கிய வழக்கில் விடுதியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இக்கொலை வழக்கில் தொடர்புடைய 5 கல்லூரி மாணவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இதில் தொடர்புடைய மற்ற நபர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், சேகரிக்கப்படும் ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.