கோவை வெள்ளலூர் கறிக்கடை பேருந்து நிறுத்தம் அருகே, கடந்த 30ம் தேதி உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்த சரஸ்வதி என்ற மூதாட்டியிடம் மர்ம நபர் ஒருவர் நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சரஸ்வதி தனது உறவினர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, கருப்பு நிற முகமூடி அணிந்த இளைஞர் ஒருவர் அங்கு வந்துள்ளார். பின்னர், அருகில் உள்ள கிளினிக் எப்போது திறக்கும் என்றும், மருத்துவரின் வீடு எங்கு இருக்கிறது என்றும் அவரிடம் விசாரித்துள்ளார்.
இதனை நம்பிய சரஸ்வதி, மருத்துவரின் வீடு இருக்கும் திசையை அந்த இளைஞரிடம் காண்பித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக, அவரது கழுத்தில் அணிந்திருந்த சுமார் 4 பவுன் தங்க செயினை அந்த நபர் பறித்துள்ளார். தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து வேகமாக தப்பி சென்றுள்ளார்.
நகை பறிக்கப்பட்ட அதிர்ச்சியில் சரஸ்வதி கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அந்த நபரை பிடிக்க முயன்றபோதும், அவர் வாகனத்தில் தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சரஸ்வதி அளித்த புகாரின் அடிப்படையில் போத்தனூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன.
இதையடுத்து சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில் நகை பறிப்புக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை கண்டறிந்தனர். விசாரணையில், குற்றவாளிகள் தங்களது அடையாளத்தை மறைக்க முகமூடி அணிந்திருந்ததும், வாகனத்தின் பதிவு எண்ணை மறைப்பதற்காக கருப்பு நிற டேப் ஒட்டியிருந்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கே.ஜி. சாவடி அருகே உள்ள கல்லூரியில் படித்து வரும் மாணவன் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவருக்கு இந்த சம்பவத்தில் உதவியதாக கூறப்படும் அவரது காதலியும் கைது செய்யப்பட்டார்.
இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசையிலும், மாணவனுக்கு இருந்த கடனை அடைப்பதற்காகவும் வயதான பெண்களை குறிவைத்து நகைகளை பறித்ததாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து 2 செல்போன்கள் மற்றும் நகை பறிப்புக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த இருவருக்கும் இதேபோன்று நடைபெற்ற வேறு நகை பறிப்பு சம்பவங்களில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போத்தனூர் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.