தேனி மாவட்டம் வருசநாடு அருகே காட்டு ஆமணக்கு விதைகளைச் சாப்பிட்ட 12 அரசுப் பள்ளிக் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சனூத்து மலைக் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 18 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மதியம் மலைப்பகுதியில் கிடந்த காட்டு ஆமணக்கு விதைகளைச் சில குழந்தைகள் விளையாட்டாகச் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. பள்ளி முடிந்து வீடு திரும்பிய குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இரண்டு குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே இன்று மேலும் 10 குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர்களும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இச்சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகளும், போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.