திட உணவு, திரவம் என எதையும் விழுங்க முடியாமல் தவித்த 8 வயது சிறுவனுக்கு, தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக நவீன எண்டோஸ்கோப்பி சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறுவனுக்கு அரிய வகை உணவுக்குழாய் பாதிப்பான 'டைப் 2 அகலேசியா கார்டியா' நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில், 'போயம்' எனப்படும் தழும்பில்லா எண்டோஸ்கோப்பி சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர் செந்தூரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சுமார் 50 நிமிடங்களில் சிகிச்சையை முடித்தனர். குழந்தைகளின் உணவுக்குழாய் மிகவும் சிறியதாகவும் திசுக்கள் மென்மையானதாகவும் இருக்கும் என்பதால், மருத்துவத்துறையில் இந்த சிகிச்சை சவாலானதாகக் கருதப்படுகிறது. சிகிச்சைக்குப் பிறகு 24 மணி நேரத்திலேயே சிறுவனால் திரவ உணவை அருந்த முடிந்தது. தொடர்ந்து மென்மையான உணவுகளையும் உட்கொண்டு, திருப்திகரமாக குணமடைந்து வீடு திரும்பினார். இதன் மூலம் குழந்தைகளுக்கான நவீன மருத்துவ சிகிச்சையில் முக்கிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்து.