செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அருகே உள்ள வேலூர் கிராம மக்கள், மூன்று தலைமுறைகளாக அடிப்படை வசதிகளின்றித் தவித்து வருகின்றனர். 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இக்கிராமத்தில், சுத்தமான குடிநீரும், பேருந்து வசதியும் இல்லை என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். உப்புத்தன்மை கொண்ட குடிநீரால் சிறுநீரக பாதிப்புகள் ஏற்பட்டு, 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். பள்ளி மாணவர்கள் சுமார் 5 முதல் 6 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று கல்வி பயில்கின்றனர். காலை 6 மணிக்குப் புறப்படும் மாணவர்கள், இரவு 8 மணிக்கே வீடு திரும்புவதால் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர். மினி பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும், கிராமத்திலேயே வாக்குச்சாவடி அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என வேதனை தெரிவிக்கும் மக்கள், புதிய அரசாவது தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுமா என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.