சென்னை திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் வடிவுடையம்மன் கோயிலில் புற்றீஸ்வரர் தரிசனத்தின்போது VIP கலாசாரம் தலைதூக்கியுள்ளதாகப் பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மூன்று நாட்கள் நாக கவசம் இன்றி காட்சியளிக்கும் புற்றீஸ்வரரைத் தரிசிக்க இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். 100 ரூபாய் மற்றும் இலவச தரிசன வரிசைகள் இருந்தும் முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. கடும் வெயிலில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில், போலீசாரின் குடும்பத்தினர் தனி வழியில் விரைவாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, அம்பத்தூர் தவெக எம்.எல்.ஏ பாலமுருகன் வரிசையில் நிற்காமல் தரிசனம் செய்ததாகவும் சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த ஆண்டு இதேபோன்ற விவகாரத்தில் சேகர்பாபு விமர்சனங்களைச் சந்தித்த நிலையில், தற்போது மீண்டும் VIP தரிசனம் விவாதமாகியுள்ளது. அனைவருக்கும் சமமான தரிசன வாய்ப்பு வழங்க வேண்டும் எனப் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.