யாராக இருந்தாலும் நடவடிக்கை பாயும் என எம்.எல்.ஏக்களுக்கு முதல் அமைச்சர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தவெக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தவெக எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்நததாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மனு கொடுக்க வந்தவரை தாக்கியதாக துணை சபாநாயகர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ , மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சூழலில்தான் தவெக எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டம், மாலை 4 மணியளவில் தொடங்கிய நிலையில் எம்.எல்.ஏக்களை தனித்தனியாக முதல் அமைச்சர் விஜய் அழைத்து பேசியதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனையின் போது எம்.எல்.ஏக்களுக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது. தவெக எம்.எல்.ஏ.க்களை சிக்க வைக்கும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு வருவதாகவும், அனைவரும் ஒற்றுமையாக இருந்து மக்கள் சேவையைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டதாக சொல்லப்படுகிறது. தவறான வழியில் செல்லும் எம்.எல்.ஏ.க்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், எந்த பிரச்சினையாக இருந்தாலும் தனது கவனத்திற்கு கொண்டு வரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.