காயமடைந்த உடலில் ஸ்டேப்ளர் பின்களுடன் ஆதரவின்றித் தவித்த வடமாநிலத் தொழிலாளிக்கு உதவி செய்து நெகிழ வைத்துள்ளார் கோவை போக்குவரத்துக் காவலர்! கோவை ஜி.பி. சிக்னல் அருகே சிறப்பு உதவி ஆய்வாளர் பிரபாகரன் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தபோது, தள்ளாடியபடி நின்ற தொழிலாளியைக் கவனித்துள்ளார். அவர் மதுபோதையில் இருப்பதாக முதலில் சந்தேகித்த நிலையில், விசாரித்தபோதுதான் உடல் முழுவதும் காயங்களுடன் இருப்பது தெரியவந்தது. ரோகித் என்ற அந்தத் தொழிலாளி, குரும்பபாளையத்தில் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயரத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்ததாகத் தெரிவித்துள்ளார். காயங்களுக்கு முறையான சிகிச்சை கிடைக்காமல் தவித்த அவருக்கு உணவு, குடிநீர் வழங்கிய பிரபாகரன், ஈரநெஞ்சம் தன்னார்வ அமைப்பினரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தார். காவலரின் மனிதாபிமானச் செயலைப் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.