கோவையில் கீழே கிடந்த மணி பர்ஸை நேர்மையுடன் உரியவரிடம் ஒப்படைத்த 11-ம் வகுப்பு மாணவிக்கு 2 கிராம் தங்க மோதிரம் பரிசாகக் கிடைத்துள்ளது. வெள்ளானப்பட்டியைச் சேர்ந்த சுபிக்ஷா, கடந்த 16-ம் தேதி காளப்பட்டி சாலையில் சென்றபோது மணி பர்ஸ் ஒன்றைக் கண்டெடுத்துள்ளார். அதில் ஆதார் அட்டை, ஏடிஎம் கார்டு மற்றும் ரூ.10,800 ரொக்கப்பணம் இருந்துள்ளது. இதையடுத்து தனது தந்தை விஸ்வநாதனிடம் தகவல் தெரிவித்த சுபிக்ஷா, வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் உரிமையாளரைக் கண்டுபிடிக்க உதவியுள்ளார். இதன் மூலம் மணி பர்ஸைத் தவறவிட்ட மோகன்ராஜ் தொடர்புகொள்ளப்பட்டார். பின்னர் மாணவியின் நேர்மையைப் பாராட்டும் வகையில் அவரது வீட்டிற்கே நேரில் சென்ற மோகன்ராஜ், 2 கிராம் தங்க மோதிரத்தைப் பரிசளித்துள்ளார். பணத்தையும் பொருட்களையும் தனதாக்கிக் கொள்ளாமல் நேர்மையுடன் செயல்பட்ட மாணவிக்கு இந்தப் பரிசு கிடைத்துள்ளது. இவரது செயல் அப்பகுதி மக்களிடையே பாராட்டுகளைப் பெற்றுள்ளது.