திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கடன் வசூலின்போது சாதிப் பெயரைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசியதாக தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது புகார் எழுந்துள்ளது. மூலனூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரின் அக்கா வனிதாவின் செல்போனுக்கு அழைத்த பல்லடம் தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியர் ஜஸ்டின் சங்கர், கடன் தொகையைக் கேட்பதாகக் கூறி ஆபாசமான வார்த்தைகளால் பேசியதுடன், சாதிப் பெயரைக் குறிப்பிட்டு அவதூறு பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும் பெண்களையும் இழிவுபடுத்திப் பேசியதாகப் புகாரில் எழுந்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சுரேஷ்குமார், சம்பந்தப்பட்ட ஊழியர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும், நிதி நிறுவனத்தைத் தடை செய்யவும் கோரி தாராபுரம் டிஎஸ்பி சிவக்குமாரிடம் புகார் மனு அளித்துள்ளார். புகார் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.