திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நியாய விலைக் கடை ஊழியர்களிடம் மாமூல் கேட்டு மிரட்டுவதாகப் புகார் எழுந்துள்ளது. பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரேஷன் அரிசி முறைகேடாக விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் சிலர் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, நியாய விலைக் கடை ஊழியர்களைத் தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்டு குறிப்பிட்ட நபர் பணம் கேட்டு மிரட்டுவதாகப் பணியாளர் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் ஊழியர்கள் அச்சத்துடனும் மன உளைச்சலுடனும் பணியாற்றுவதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், மிரட்டல் விடுப்பதாகக் கூறப்படும் நபரின் தொலைபேசி எண்ணையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதுதொடர்பாக பழனி காவல் நிலையத்தில் புகார் அளித்த சங்க நிர்வாகிகள், உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். புகாரைப் பெற்ற போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.