கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தென்பெண்ணை ஆற்றில் முதலாம் ராஜராஜ சோழன் காலத்தைச் சேர்ந்த செப்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உளுந்தாம்பட்டு, தளவானூர் பகுதிகளில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் விழுப்புரம் அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை மாணவர்கள் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆற்றின் மேற்பரப்பில் செப்பு நாணயம் ஒன்று கிடைத்துள்ளது. சுமார் 4.35 கிராம் எடை கொண்ட இந்த நாணயத்தை ஆய்வு செய்தபோது, அதன் ஒரு பக்கத்தில் தேவநாகரி எழுத்தில் 'ஸ்ரீராஜராஜ' என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதன் மூலம் கி.பி. 985 முதல் 1014 வரை ஆட்சி செய்த முதலாம் ராஜராஜ சோழன் காலத்து நாணயம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. நாணயத்தின் இருபுறமும் உருவங்கள், திரிசூலம், விளக்கு உள்ளிட்ட அடையாளங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கண்டுபிடிப்பு வரலாற்று ஆர்வலர்களிடையே கவனம் பெற்றுள்ளது.