கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் ஜவுளிக்கடை மற்றும் மருந்தகம் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. திட்டக்குடி பேருந்து நிலையம் அருகே நள்ளிரவில் மர்ம நபர்கள் பட்டாசு வெடித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட தீப்பொறி அருகிலிருந்த துணிக்கடையில் விழுந்து தீப்பற்றியது. மளமளவெனப் பரவிய தீ, அருகில் இருந்த மருந்தகத்திற்கும் பரவி இரண்டு கடைகளும் தீக்கிரையாகின. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், சுமார் அரை மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், அருகிலிருந்த மற்ற கடைகளுக்கும் தீ பரவாமல் தடுத்தனர். இந்த தீ விபத்தில் கடைகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தன. பட்டாசு வெடித்ததற்கும், தீ விபத்திற்கும் காரணமான மர்ம நபர்களைத் திட்டக்குடி போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.