கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே உள்ள புதுப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் வாழ்முனி. மீன்பிடி வேலைக்காக சவுதி அரேபியா சென்றிருந்த இவர், கடந்த அக்டோபர் 3ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்துவிட்டதாக, அவருடன் பணிபுரிந்த சக ஊழியர் மூலம் குடும்பத்தினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி லோகேஸ்வரி, கணவரின் உடலைத் தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக, தனது இரண்டு குழந்தைகளுடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்ற அவர், மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தார். வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டு சொந்த ஊருக்குக் கொண்டு வர அரசு உதவ வேண்டும் என குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இரண்டு குழந்தைகளுடன் கணவரின் உடலை மீட்டுத் தரக்கோரி மனைவி மனு அளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.