தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள், சென்னை திரும்புவதால் உள்நாட்டு விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் சென்னைக்கு வரும் விமானங்களின் பயணக் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட தமிழக நகரங்களில் இருந்தும், டெல்லி, மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், புவனேஸ்வர் உள்ளிட்ட வடமாநில நகரங்களில் இருந்தும் சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் உயர்ந்துள்ளது. தூத்துக்குடி விமானக் கட்டணம் 7 ஆயிரத்து 45 ரூபாயிலிருந்து 17 ஆயிரத்து 639 ரூபாயாகவும், மதுரையில் இருந்து 4 ஆயிரத்து 673 ரூபாயிலிருந்து 11 ஆயிரத்து 877 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. திருச்சியில் இருந்து 14 ஆயிரத்து 666 ரூபாயாகவும், சேலத்தில் இருந்து 13 ஆயிரத்து 98 ரூபாயாகவும் கட்டணம் அதிகரித்துள்ளது. குறிப்பாக அகமதாபாத் விமானக் கட்டணம் 21 ஆயிரத்து 944 ரூபாயாகவும், புவனேஸ்வரில் இருந்து 26 ஆயிரத்து 209 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. நாளை முதல் பணிகள் தொடங்க உள்ளதால், கட்டண உயர்வையும் பொருட்படுத்தாமல் பயணிகள் சென்னை திரும்பி வருகின்றனர். திடீர் கட்டண உயர்வு பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.