விவசாயத் தோட்டத்தில் முளைத்த ராட்சச வெள்ளைக் காளானை பொதுமக்கள் வியப்பில் ஆழ்ந்து பார்த்து சென்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடியைச் சேர்ந்த விவசாயி மாரிமுத்து, வழக்கம்போல் தனது தோட்டத்திற்குச் சென்றுள்ளார். அப்போது பழைய ஆயக்குடி காவல் நிலையத்தின் பின்புறம் உள்ள விவசாய நிலத்தில், செடிகளுக்கு அருகே குடை போன்ற வடிவில் வித்தியாசமான வெள்ளைக் காளான் ஒன்று இருப்பதைக் கண்டுள்ளார். அருகில் சென்று பார்த்தபோது, சுமார் 5 கிலோ எடைக்கும் அதிகமான ராட்சச காளான் என்பது தெரியவந்தது. இதனைப் பார்த்து ஆச்சரியமடைந்த மாரிமுத்து, காளானைப் பிடுங்கி வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.