திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பட்டா கேட்டு பொதுமக்கள் முற்றுகையிட்டதால், சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் பின்வாசல் வழியாக வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுண்ணாம்புகுளம் பகுதியில் வருவாய்த்துறை சார்பில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற எம்.எல்.ஏ விஜயகுமார், பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். அப்போது, பலமுறை போராட்டம் நடத்தியும் தங்களுக்கு பட்டா கிடைக்கவில்லை எனக் கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டு மனுக்களை வழங்க முயன்றனர். இதனால் முகாமில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, தவெக நிர்வாகிகள் எம்.எல்.ஏவை முன்பக்க வழியாக அழைத்துச் செல்லாமல், பின்பக்க வழியாக அழைத்துச் சென்று காரில் அனுப்பி வைத்தனர். இருப்பினும், கவரப்பேட்டை அருகே பண்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் அவரது காரை வழிமறித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பெண்களைச் சமாதானப்படுத்தினர். இதையடுத்து எம்.எல்.ஏ அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.