ஒரு கேரி பேக்கிற்கு 15 ரூபாய் வசூலித்த உணவகத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பெங்களூருவில் உள்ள மேகனா ஃபுட்ஸ் உணவகத்தில், கடந்த மே 8-ம் தேதி பிரணவா என்ற 25 வயது இளைஞர் ஜொமேட்டோ மூலம் பனீர் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். உணவுக்கான கட்டணத்துடன், உணவகத்தின் பெயர் மற்றும் லோகோ அச்சிடப்பட்ட கேரி பேக்கிற்கு 15 ரூபாய் தனியாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து அவர் நுகர்வோர் ஆணையத்தில் புகார் அளித்தார். விளம்பர நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் பிராண்டட் பேக்கிற்கு வாடிக்கையாளரிடம் கட்டணம் வசூலிப்பது நியாயமற்ற வணிக நடைமுறை என வாதிட்டார். வழக்கில் உணவகம் ஆஜராகாத நிலையில், புகாரை விசாரித்த பெங்களூரு நுகர்வோர் ஆணையம், 5 ஆயிரம் ரூபாய் இழப்பீடும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.