திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் கந்த சஷ்டித் திருவிழா கடந்த 10ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் ஆறு நாட்கள் உபவாசம் மற்றும் மிளகு விரதம் மேற்கொண்டனர். விரதத்தின் நிறைவு நாளான இன்று, பழனி திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் பாரம்பரிய தண்டு விரதம் கடைப்பிடிக்கப்பட்டது. வாழைத்தண்டு, உளுந்து, பழங்கள், இஞ்சி, தேங்காய், தயிர் உள்ளிட்ட பொருட்களைச் சேர்த்து சிறப்பு பிரசாதம் தயாரித்து முருகப்பெருமானுக்குப் படைத்து வழிபட்டனர். தொடர்ந்து பிரசாதத்தை உட்கொண்டு ஆறு நாள் விரதத்தை நிறைவு செய்தனர். கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை பழனி கிரிவீதியில் நடைபெறுகிறது. நாளை காலை முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.