அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை சுப முகூர்த்த தினம் மற்றும் வார இறுதி விடுமுறை என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். அதிகாலை முதலே அடிவாரம், கிரிவீதி மற்றும் மலைக்கோயிலில் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் மொட்டையடித்தல், குழந்தைகளுக்குக் காது குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களைச் செலுத்தினர். சிறு குழந்தைகளுக்கு முருகன் வேடமிட்டும் அழைத்து வந்தனர். பொது மற்றும் கட்டண தரிசன வரிசைகளில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பாதுகாப்புப் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.