சொத்துத் தகராறில் மாற்றுத்திறனாளி அண்ணன் வெட்டிக் கொலை. தம்பி உட்பட 5 பேர் கைது வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த எல்.ஜி. புதூரைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன்கள் தினகரன் (25), மயிலழகன் (23). விபத்தில் வலது கையை இழந்த மாற்றுத்திறனாளியான தினகரனுக்கு 8 ஏக்கர் நிலமும், மயிலழகனுக்கு 4 ஏக்கர் நிலமும் பிரிக்கப்பட்டது. தனக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை விற்று செலவழித்த மயிலழகன், தினகரன் புதிதாகக் கட்டிய 4 கடைகளில் 2 கடைகளைக் கேட்டு தகராறு செய்து வந்தார். இந்நிலையில், புதிய கடைகளுக்குக் காவலாக தந்தை பெருமாளும், பாட்டி பச்சையம்மாளும் சென்றிருந்தபோது, வீட்டில் தனியாகத் தூங்கிக் கொண்டிருந்த தினகரனை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். விருதம்பட்டு போலீஸார் நடத்திய விசாரணையில், சொத்துத் தகராறு காரணமாகத் தனது நண்பர்களுடன் சேர்ந்து அண்ணனைக் கொலை செய்ததை மயிலழகன் ஒப்புக்கொண்டார். இதையடுத்து மயிலழகன் மற்றும் அவரது நண்பர்கள் ஜெயப்பிரகாஷ், அசோக்குமார், விஜயகுமார், ரவிக்குமார் ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.