ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அருகே குவாட்டருக்கு கூடுதலாக 10 ரூபாய் கேட்டதால் ஆத்திரமடைந்த மதுப்பிரியர், டாஸ்மாக் கடையின் PAYTM இயந்திரத்தைத் தூக்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லாலாப்பேட்டையில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையில் மாலை 7 மணியளவில் வாலிபர் ஒருவர் குவாட்டர் வாங்கியுள்ளார். அப்போது விற்பனையாளர்கள் கூடுதலாக 10 ரூபாய் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், கடையில் இருந்த PAYTM இயந்திரத்தைத் தூக்கிக்கொண்டு மின்னல் வேகத்தில் ஓடியுள்ளார். இதனால் இயந்திரம் இல்லாமல் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், சுமார் ஒன்றரை மணி நேரம் மதுவிற்பனை நிறுத்தப்பட்டது. இதற்கிடையே இயந்திரத்தை எடுத்துச் சென்ற வாலிபர், மற்றொரு நபர் மூலம் மீண்டும் கடைக்கு அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து விற்பனை தொடங்கியது. இயந்திரத்தை எடுத்துச் சென்ற வாலிபர் யார் என்பது குறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.