சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள தண்டையார்பேட்டை ஐஓசி பேருந்து முனையத்தில் இருந்து 7 புதிய பேருந்து வழித்தடங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. போக்குவரத்துத்துறை அமைச்சர் பார்த்திபன் மற்றும் நிதித்துறை அமைச்சர் மரியா வில்சன் ஆகியோர் கொடியசைத்து பேருந்து சேவைகளைத் தொடங்கி வைத்தனர். ஐஓசி முதல் திருவான்மியூர், அம்பத்தூர், தீவுத்திடல், வடபழனி, கோயம்பேடு, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு புதிய வழித்தடங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து மாதவரத்தில் இருந்தும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் பார்த்திபன் தெரிவித்தார். அப்போது, முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அதிகாரிகள் தங்களை மதிப்பதில்லை என அமைச்சர் கூறியதாக தகவல் பரவுகிறதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, அப்படி எதுவும் கூறவில்லை என மறுத்த அமைச்சர், கையெடுத்துக் கும்பிட்டபடி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த வீடியோ தற்போது கவனம் பெற்றுள்ளது.