முரசு புயலில் சிக்கி உயிரிழந்த கடலூர் மாவட்டம் மீனவரின் உடலுக்கு அமைச்சர் ராஜ்குமார் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கடந்த மூன்றாம் தேதி சென்னையில் இருந்து ஆந்திர கடலோரப் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் முரசு புயலில் சிக்கி மாயமானார்கள். இதில் சிதம்பரம் அருகே உள்ள சாமியார் பேட்டையைச் சேர்ந்த 58 வயதான மீனவர் நாராயணசாமியின் உடல் கரை ஒதுங்கியது. பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் இறந்த மீனவரின் கிராமத்திற்கு சென்ற தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்குமார் மீனவர் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து இறந்த மீனவரின் குடும்பத்திற்கு நிவாரண தொகையும் அளிக்கப்பட்டது.