பழனி திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கந்தர் சஷ்டி திருவிழாவின் இரண்டாம் நாள் மற்றும் வளர்பிறை சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு, அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். இதையடுத்து, கோயில் வளாகத்தில் ஒரே நாளில் 60-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்குத் திருமணங்கள் மேளதாளங்கள் முழங்க கோலாகலமாக நடைபெற்றன. இதேபோல், 85-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு முடி காணிக்கை செலுத்தி காதுகுத்து வைபவமும் நடைபெற்றது. ஒருபுறம் கந்தர் சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள், மறுபுறம் திருமணம் மற்றும் காதுகுத்து நிகழ்ச்சிகளுக்கு வந்த குடும்பத்தினர் என கோயில் முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.