நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இரண்டாவது நாளாகத் தொடரும் கடும் உறைபனியால் தேயிலைத் தோட்டங்கள் வெள்ளைக் கம்பளம் போர்த்தியது போல் காட்சியளிக்கின்றன. அதிகாலை நேரத்தில் நிலவும் கடும் குளிரால் புல்வெளிகள், செடிகள் மற்றும் தேயிலைத் தோட்டங்கள் மீது பனிப்படலம் படர்ந்து இயற்கை எழில் கொஞ்சும் காட்சியை உருவாக்கியுள்ளது. இதற்கிடையே, சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் சேவை 26 நாட்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது. கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக தண்டவாளங்கள் சேதமடைந்ததால் ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது சீரமைப்புப் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து மலை ரயில் மீண்டும் இயக்கப்படுகிறது. ஒருபுறம் உறைபனியில் ஜொலிக்கும் தேயிலைத் தோட்டங்கள், மறுபுறம் மீண்டும் தண்டவாளத்தில் ஓடும் மலை ரயில் என நீலகிரி சுற்றுலாப் பயணிகளை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.