மயிலாடுதுறையில் நடைபெற்று வரும் துலா உற்சவத்தையொட்டி, பக்தர்களுக்கு புனித கங்கை நீரை பாட்டில்களில் விற்பனை செய்யும் பணியில் அஞ்சல் துறை ஈடுபட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மயிலாடுதுறைக்கு வருகை தந்து காவிரி ஆற்றில் புனித நீராடி வருகின்றனர். ஐப்பசி மாதத்தில் நடைபெறும் துலா உற்சவத்தில், காவிரியில் நீராடுவது புனிதமாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், பக்தர்களுக்கு கங்கை நதியின் புனித நீரை வழங்கும் வகையில், அஞ்சல் துறை சார்பில் பாட்டில்களில் அடைக்கப்பட்ட கங்கை நீர் விற்பனை செய்யப்படுகிறது. இதனை ஆர்வத்துடன் வாங்கிச் செல்லும் பக்தர்கள், புனித கங்கை நீரை வீடுகளுக்கும் எடுத்துச் செல்கின்றனர். மயிலாடுதுறையில் அஞ்சல் துறையின் இந்த முயற்சி பக்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.