நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சிங்களாந்தபுரத்தில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் 6 பேர் கொண்ட கும்பல் புகுந்து இரண்டு ஊழியர்களைத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் நிரப்ப வந்த இருவருக்கும் ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, மேலும் நான்கு பேரை அழைத்து வந்து தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஒரு ஊழியரை அறைக்குள் வைத்து கதவைப் பூட்டிய நிலையில், ஆத்திரமடைந்த கும்பல் கதவை உடைக்க முயன்றதுடன் கண்ணாடிக் கதவையும் உடைத்ததாகப் புகார் எழுந்துள்ளது. இதில் ஒருவருக்குக் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.