ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சி 23-வது வார்டில் அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் நகராட்சி ஆணையாளரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பகுதியில் 15-க்கும் மேற்பட்ட தெருக்களில் சுமார் 1,500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு சாலை, குடிநீர், கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பல மாதங்களாக நகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை எனக் கூறப்படுகிறது. ஓராண்டைக் கடந்தும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நகராட்சி ஆணையாளரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, தெருக்களை நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆணையாளர் உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். நகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.