ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் ஒருவரின் துரிதமான செயல்பாட்டால் 62 வயது முதியவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட அரக்கோணம் ரயில் நிலையத்தில், 'ஆபரேஷன் ஜீவன் ரக்ஷா' திட்டத்தின் கீழ் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. நவம்பர் 8ஆம் தேதி, பெங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கிச் சென்ற லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயில் (12608), அரக்கோணம் ரயில் நிலையத்தின் 6-வது நடைமேடைக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது, ரயிலின் பொதுப் பெட்டியிலிருந்து இறங்க முயன்ற 62 வயது முதியவர் ஒருவர் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதனைக் கவனித்த அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த RPF காவலர் பப்பன் சவுகான், உடனடியாகச் செயல்பட்டு முதியவரை ஆபத்தான நிலையிலிருந்து மீட்டார். இதனால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. காப்பாற்றப்பட்ட முதியவர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், அவருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது உயிரைக் காப்பாற்றிய காவலருக்கு முதியவர் நன்றியும் தெரிவித்தார். ரயில்வே பாதுகாப்புப் படையினரின் விழிப்புணர்வையும், அர்ப்பணிப்பையும் இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. மேலும், பயணிகள் ஓடும் ரயிலில் ஏறவோ, இறங்கவோ வேண்டாம் என்றும், ரயில் நிலையங்களில் ரயில்கள் வரும்போதும் செல்லும்போதும் நடைமேடை விளிம்பிலிருந்து பாதுகாப்பான தூரத்தில் இருக்குமாறும் சென்னை கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.