இந்தியாவில் தங்க நகைகளில் கலப்படம் செய்யப்படும் புதிய மோசடி குறித்து நாளிதழ் ஒன்று நடத்திய ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. தங்கத்தின் எடையை அதிகரிக்க, ரீனியம் எனப்படும் அரிய வகை உலோகத் தூள் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. சீனாவின் ஷென்சென் நகரைச் சேர்ந்த முகவர் ஒருவர், தங்கள் நிறுவனம் ரீனியம் தூள் தயாரிப்பதாகவும், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விற்பனையாளர்கள் இருப்பதாகவும் தெரிவித்ததாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மேலும், 25 சதவீதம் வரை இந்தத் தூளைக் கலந்தாலும் வழக்கமான பரிசோதனையில் கண்டுபிடிக்க முடியாது என அவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைச் சோதிக்க, மும்பை விற்பனையாளர் மூலம் ஒரு கிராம் ரீனியம் தூள் பெறப்பட்டு, ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள நகைக்கடைக்காரர் உதவியுடன் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அப்போது, 7.83 கிராம் 24 காரட் தங்கத்துடன் ஒரு கிராம் ரீனியம் தூள் கலக்கப்பட்டதில், மொத்த எடை 8.83 கிராமாக அதிகரித்துள்ளது. ஆனால், பரிசோதனையில் அது 24 காரட் தங்கமாகக் காட்டியதாகக் கூறப்படுகிறது. பின்னர், அதனுடன் மற்றொரு உலோகத்தைக் கலந்து 22 காரட் நகையாகத் தயாரித்துள்ளனர். முத்திரைச் சான்றும் பெற்ற அந்த நகையில், உண்மையான தங்கத்தின் அளவு வெறும் 81.73 சதவீதம் மட்டுமே என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுமட்டுமின்றி, மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் ருத்தேனியம், இரிடியம், ஆஸ்மியம் போன்ற கன உலோகங்களும் தங்கத்தில் கலக்கப்படுவதாக வணிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, 2024-25ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட நகைக்கடைகளில் 81 சதவீத கடைகளில் ஆய்வு நடத்தப்படவில்லை என மத்திய கணக்குத் தணிக்கைத் துறையின் வரைவு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இத்தகைய கலப்படங்களைக் கண்டறிய எக்ஸ்-கதிர் ஒளிர்வு ஆய்வு, மின்னணு நுண்ணோக்கி போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்கள் உதவும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, நம்பகமான கடைகளில் முத்திரையிடப்பட்ட நகைகளை வாங்குவதுடன், அதன் தர விவரங்கள், ரசீது மற்றும் வரி விவரங்களையும் சரிபார்ப்பது அவசியம்.