திண்டுக்கல் மாவட்டம் பழனி – கொடைக்கானல் மலைப்பாதையில் சவரிக்காடு பகுதியில் நிகழ்ந்த கோர விபத்தின் பதைபதைக்க வைக்கும் ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன. நேற்று இரவு 19 பயணிகளுடன் சென்ற 407 ரக மினி வேன், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத் தடுப்புக் கற்களை உடைத்துக்கொண்டு சுமார் 100 அடி ஆழப் பள்ளத்தில் கவிழ்ந்தது. கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் திருமண வரவேற்பு மற்றும் மறுவீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு பழனிக்குத் திரும்பியபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது. இதில் பழனியைச் சேர்ந்த ஷேக், நிஜாமுதீன், 60 வயதான அப்பாஸ் ஆகிய மூவர் உயிரிழந்தனர். சிறுவன் உட்படப் பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது வெளியாகியுள்ள ட்ரோன் காட்சிகளில், அடர்ந்த மரங்கள் மற்றும் புதர்களுக்கு இடையே வெள்ளை, பச்சை நிற வேன் தலைகுப்புறக் கவிழ்ந்து கிடப்பது பதிவாகியுள்ளது. மலைப்பாதையின் ஆபத்தான சரிவையும், விபத்தின் தீவிரத்தையும் இந்தக் காட்சிகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.