தெலங்கானாவில் மூன்று ஆண்டுகளாகச் சில்லறை நாணயங்களைச் சேமித்து 1 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புதிய இருசக்கர வாகனத்தை வாங்கிய போதகர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். தெலங்கானா மாநிலம், மஞ்சேரியல் மாவட்டம், லக்செட்டிபேட்டையில் உள்ள தேவாலயத்தில் போதகராகப் பணியாற்றி வருபவர் 51 வயதான பி. ரவி ஜோசப். இவர் மளிகைப் பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட அன்றாடத் தேவைகளுக்குப் பொருட்கள் வாங்கும்போது மீதமாகக் கிடைக்கும் 10 ரூபாய் நாணயங்களைச் செலவழிக்காமல் தனியாகச் சேமித்து வந்துள்ளார். இவ்வாறு மூன்று ஆண்டுகளாகச் சிறுகச் சிறுகச் சேமித்த நாணயங்களை அண்மையில் எண்ணிப் பார்த்தபோது, மொத்தம் ரூ.1.23 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பணத்தைக் கொண்டு புதிய இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ளார். அன்றாடச் செலவுகளில் சிறிய தொகையைச் சேமித்ததன் மூலம் தனது நீண்ட நாள் தேவையை நிறைவேற்றிய ரவி ஜோசப்பின் செயல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.