மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் இந்து அமைப்பு மற்றும் பாஜக நிர்வாகிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இந்து முன்னணி கோட்டச் செயலாளர் பாலன், பாஜக இளைஞரணி துணைத் தலைவர் கமலேஷ் உள்ளிட்ட நிர்வாகிகளை அவர்களது வீடுகளுக்குச் சென்ற போலீசார் வீட்டுக்காவலில் வைத்தனர். இதற்கிடையே, திருப்பரங்குன்றம் செல்லத் திட்டமிட்டிருந்த பாஜக திருவள்ளூர் மேற்கு மாவட்டத் தலைவர் அஸ்வினையும் திருவேற்காடு போலீசார் வீட்டுக்காவலில் வைத்தனர். இதனால், தனது வீட்டு வாசலிலேயே தீபத்தூண் போன்ற அமைப்பை நிறுவி, கட்சியினருடன் தீபம் ஏற்றி வழிபட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உடல்களை வீட்டுக்காவலில் வைக்கலாம்; மனிதர்களின் உணர்வுகளை வீட்டுக்காவலில் வைக்க முடியாது எனத் தெரிவித்தார். மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் பத்தாயிரம் இடங்களில் தீபம் ஏற்றுவோம் என்றும், வீட்டுக்காவல் நடவடிக்கையைக் கண்டித்து சட்டரீதியாகப் போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறினார். திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தால் பல்வேறு பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது.