தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே, தீபாவளி பண்டிகையின்போது பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களைத் தட்டிக்கேட்ட பொதுமக்களிடம், அரிவாளைக் காட்டி மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாயர்புரம் அடுத்த நேரு காலனி தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், நேற்று இரவு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுமார் 8.30 மணியளவில் மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த இளைஞர்கள் சிலர், அப்பகுதியில் அதிவேகமாக பைக் ஓட்டி ரேஸில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி பொதுமக்கள், இளைஞர்களை அழைத்து தட்டிக்கேட்டுள்ளனர். இதையடுத்து புதுநகரைச் சேர்ந்த சுனில், அஜய், சிவபெருமாள், கந்தசாமி, முத்துகிருஷ்ணன் ஆகிய ஐந்து இளைஞர்கள் அங்கு வந்து பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தங்களிடம் வைத்திருந்த அரிவாளைக் காட்டி பொதுமக்களை மிரட்டியதுடன், சிலரை வெட்டவும் முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக சாயர்புரம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதை அறிந்த இளைஞர்கள், தாங்கள் கொண்டு வந்த இருசக்கர வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதற்கிடையே, இளைஞர்கள் பொதுமக்களை அரிவாளைக் காட்டி மிரட்டிய காட்சிகளை அப்பகுதி மக்கள் தங்களது செல்போன்களில் பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த தீபன் அளித்த புகாரின் பேரில், சாயர்புரம் போலீசார் ஐந்து இளைஞர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தீபாவளி கொண்டாட்டத்தின்போது பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களைத் தட்டிக்கேட்ட பொதுமக்களுக்கே அரிவாளைக் காட்டி மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.