திருச்செங்கோடு சின்ன பாலு தெரு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். லாரி மெக்கானிக் ஆன இவரின் மனைவி தான் ரசிகா. கடந்த 5 ஆண்டுகளுக்கும் முன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு 6 வயதில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். கணேசன் குடிப்பழக்கம் உள்ளவர் என கூறப்படுகிறது. இதனால் தம்பதிகளுக்குள் அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் கணவனைப் பிரிந்து அதே தெருவில் இருக்கும் தனது தந்தை வீட்டில் ரசிகா வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவரது பெரியப்பா மகன் வீட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்காக கணவனுடன் சென்றுள்ளார். அப்போது சமாதானம் பேசிய கணேசன், இப்போது குடியிருக்கும் வீட்டில் பாம்பு தொல்லை இருப்பதாகவும் வேறு வீட்டுக்கு சென்று விடலாம் எனவும் கூறியுள்ளார். புதிதாக ஒரு வீட்டிற்கு ஐந்தாயிரம் ரூபாய் முன் பணம் கொடுத்து வாடகைக்கு செல்ல முடிவெடுத்துள்ளனர். மேலும் முன்பணமாக பத்தாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டிய நிலையில், அதனை கடன் வாங்குவதற்காக நேற்று காலை ரசிகாவை கணேசன் தனது டூவீலரில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.. இந்நிலையில் செங்கோடம்பாளையம் அருகே உள்ள தனியார் மில்லின் பின்புற காட்டுப் பகுதியில் ரசிகாவின் உடல் கத்திக் குத்து காயங்களுடன் கிடந்துள்ளது. மாலை சுமார் 4:30 மணிக்கு அதனை கண்டவர்கள் போலீசருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் திருச்செங்கோடு ரூரல் போலீசார் ரசிகாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து திருச்செங்கோடு ஏ.எஸ்.பி அஸ்வினி நேரடியாக விசாரணை மேற்கொண்டுள்ளார். டூவீலரில் ரசிகாவை அழைத்துச் சென்ற கணேசனின் செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகி உள்ளது . இதனால் கணேசனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் கத்தி ஒன்றும் ரத்தம் உறைந்த நிலையில் கடந்துள்ளது. மேலும் போலீசார் மோப்பநாய், கைரேகை நிபுணர்களை வரவழைத்தும் விசாரணை மேற்கொண்டனர். கத்தியிலிருந்த கைரேகை அந்த பகுதியில் இருந்த கால்தடம் ஆகியவை கைரேகை நிபுணர்களால் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கணவன் மனைவிக்குள் இருந்த தகராறு காரணமாக கணவனே மனைவியை கொலை செய்தாரா அல்லது வேறு ஏதாவது சம்பவம் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்..