திருநெல்வேலி பாளையங்கோட்டை புதுப்பேட்டை தெருவில் 70 வயது மூதாட்டியின் வீட்டில் 13 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக மூதாட்டி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய நபர் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகியான இசக்கிராஜாவை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட இசக்கிராஜாவை கட்சியில் இருந்து நீக்கி தவெக தலைமை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. கட்சி நிர்வாகி ஒருவர் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.