திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் ஏழாம் நாள் நிறைவு நிகழ்ச்சியாக முருகப்பெருமானுக்கும் வள்ளி, தெய்வானை தாயாருக்கும் வெகு விமரிசையாக திருக்கல்யாணம் நடைபெற்றது. நவம்பர் 11ஆம் தேதி தொடங்கிய கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளில், மலைக்கோயில் காவடி மண்டபத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் யாகசாலை பூஜைகள், வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடைபெற்றது. ஆனால், இந்த நிகழ்ச்சியைக் காண வந்த சாமானிய பக்தர்களுக்கு போதிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விஐபி பக்தர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, முக்கியஸ்தர்கள் மூலம் அழைத்துச் சென்று அமர வைத்ததாக பக்தர்கள் புகார் தெரிவித்தனர். குடும்பத்துடன் வந்த பக்தர்கள், குழந்தைகளுடன் வந்தும் தரிசனம் செய்ய முடியாமல் தவித்ததாக வேதனை தெரிவித்தனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட பெண் காவலரும் குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனக் குற்றம்சாட்டினார். சாமானிய பக்தர்களைப் புறக்கணித்ததாகக் கூறப்படும் கோயில் நிர்வாகத்தின் மீது இந்து சமய அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முருக பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.