நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 'ஜெயிலர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் அடுத்த பாகங்கள் குறித்துப் பல்வேறு எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன. இந்நிலையில், தனியார் நிகழ்வொன்றில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை ரம்யா கிருஷ்ணனிடம் 'ஜெயிலர் 3' வருமா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "நான்தான் முதலில் ஜெயிலர் 2 வரும் எனத் தெரிவித்தேன்; அதேபோல ஜெயிலர் 3-ம் நிச்சயம் வரும்" எனக் கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து, 50 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினிகாந்த் திரையுலகில் உச்சத்தில் இருப்பது மற்றும் அவரது சுறுசுறுப்பு குறித்துப் பேசிய அவர், "இதெல்லாம் அவரால் மட்டுமே சாத்தியம்; அவரைப் பார்த்து நாம் உத்வேகம் அடைய வேண்டும்" என்றும் புகழாரம் சூட்டினார்.