CSK-வில் இருந்து துபே அவுட்? குறிவைக்கும் 3 அணிகள்.. பதிலுக்கு சிஎஸ்கே கேட்கும் தமிழக வீரர்!
சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை சேர்க்கும் நோக்கில் ஷிவம் துபேவை டிரேடிங் செய்ய சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டமிட்டுள்ளதாகவும், குஜராத், லக்னோ, டெல்லி அணிகளுடன் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐபிஎல் 2027 சீசனுக்கான அணிக் கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சீசன்களில் அணியில் காணப்பட்ட பலவீனங்களை சரிசெய்து, வலுவான அணியை உருவாக்க சிஎஸ்கே நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், இந்திய ஆல்ரவுண்டர் ஷிவம் துபேவை டிரேடிங் செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் கவனம் பெற்றுள்ளன.
சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டருக்கு சிஎஸ்கே குறி
சென்னை அணியில் ஜடேஜாவை வெளியேற்றிய பிறகு இந்திய சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டருக்கான தேவை இருந்து வருகிறது. இதனை சரிசெய்ய ஷிவம் துபேவை டிரேடிங் வெளியேற்றி, சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை பெற சிஎஸ்கே முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
குஜராத் அணியிடம் இருந்து வாஷிங்டன் சுந்தர் அல்லது சாய் கிஷோர் ஆகியோரில் ஒருவரை பெற சிஎஸ்கே விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷிவம் துபே போன்ற அதிரடி பேட்டரை பெறுவதில் குஜராத் அணிக்குள் ஆர்வம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
துபேவை வாங்க லக்னோ, டெல்லி அணியும் ஆர்வம்?
ஷிவம் துபேவை தங்கள் அணியில் சேர்க்க லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகிறது. துபேவுக்கு பதிலாக ஆயுஷ் படீனி மற்றும் ஷாபாஸ் அகமது ஆகியோரை வழங்குவது குறித்து லக்னோட் தரப்பில் முன்மொழிவு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் நிறைவேறினால், சிஎஸ்கே அணிக்கு பேட்டிங் வரிசையில் கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கலாம். ஆயுஷ் படோனியை மிடில் ஆர்டரில் பயன்படுத்துவதுடன், அணியின் தேவைக்கேற்ப அவருக்கு புதிய பொறுப்புகளையும் வழங்க முடியும். ஷாபாஸ் அகமது மூலம் ஆல்ரவுண்டர் தேர்விலும் கூடுதல் வாய்ப்பு கிடைக்கலாம்.
ஷிவம் துபேவை வாங்குவதில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலாக அசுதோஷ் சர்மா மற்றும் நிதிஷ் ராணா ஆகியோரை வழங்க டெல்லி அணி தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஒப்பந்தம் கைக்கூடும் பட்சத்தில், சிஎஸ்கே அணிக்கு அதிரடி பினிஷராக அசுதோஷ் சர்மாவும், பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பங்களிக்கக்கூடிய நிதிஷ் ராணாவும் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால், அணியின் பேட்டிங் அழுத்தை அதிகரிக்க முடியும்.
சிஎஸ்கேவின் முதல் தேர்வு யார்?
லக்னோ, டெல்லி அணிகளிடமிருந்து மாற்று வீரர்கள் குறித்த யோசனைகள் முன்வைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகும் நிலையில், சிஎஸ்கேவின் முக்கிய கவனம் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் இருப்பதாக கூறப்படுகிறது. வாஷிங்டன் சுந்தர் அல்லது சாய் கிஷோர் ஆகியோரில் ஒருவரை அணிக்கு கொண்டுவருவது சிஎஸ்கேவின் சுழற்பந்துவீச்சு பிரிவை வலுப்படுத்த உதவலாம் .
வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் பங்களிக்கக்கூடியவர். மறுபுறம், இடது கை சுழற்பந்து வீச்சாளரான சாய் கிஷோர், மிடில் ஓஅவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறன் கொண்டவர். சிஎஸ்கே அணியின் தேவையை பொறுத்து இவர்களில் ஒருவரை தேர்வு செய்வது முக்கியமாக அமையலாம்.
சாய் கிஷோருக்கு குஜராத் அணியில் போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. தொடர்ச்சியாக விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் தனது திறமையை நிரூபிக்க அவருக்கு உதவியாக இருக்கும். இருப்பினும் அவர் அணியை விட்டு வெளியேற விரும்புகிறாரா அல்லது டிரேடிங் தொடர்பாக இரு அணிகளும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனவா என்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
ஷிவம் துபே இடத்தை சிஎஸ்கே எப்படி நிரப்ப போகிறது?
ஷிவம் துபேவின் இடத்தை நிரப்புவது என்பது சாதாரண விஷயமல்ல. தனது அதிரடி பேட்டிங் மூலம் சிஎஸ்கே அணிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கி உள்ளார். குறிப்பாக, சுழற்பந்து வீச்சுக்கு எதிராக அதிரடியாக ரன்கள் சேர்க்கும் திறன் அவருக்கு கூடுதல் பலமாக உள்ளது. எனவே, அவரை டிரேடிங் செய்தால் அந்த இடத்தை நிரப்புவதற்கான சரியான வீரரை தேர்வு செய்வது சிஎஸ்கேவுக்கு முக்கியமானதாக இருக்கும்.
மறுபுறம், இந்திய சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை அணியில் சேர்ப்பதன் மூலம் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் சமநிலையை ஏற்படுத்த முடியும். இதனால் ஷிவம் துபே தொடர்பான டிரேடிங் பேச்சுவார்த்தைகள் ஐபிஎல் 2027 சீசனுக்கு முன்னதாக முக்கியத்துவம் பெறுகின்றன.