மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது, மேலும் அக்டோபர் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளிலும் ஐந்து முனை போட்டி நிலவுகிறது. ஆளும் திமுக, பிரதான எதிர்க்கட்சியான திமுக, பொதுத்தேர்தலில் இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றிபெற்ற அதிமுக ஆகியவை களத்தில் கடும் போட்டியை வெளிப்படுத்தி வருகின்றன.
நாம் தமிழர் கட்சியும் வேட்பாளரை களமிறக்கி உள்ளது. சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சி இம்முறை எந்த கூட்டணியிலும் இல்லாமல், இரண்டு கட்சிகள் மட்டும் இணைந்து இடைத்தேர்தலை சந்திக்கின்றன. தாராபுரத்தில் சிபிஐ மற்றும் மதுராந்தகம் தொகுதியில் சிபிஎம் களமிறங்கி உள்ளன.
| கட்சி | வேட்பாளர் | |
| தவெக | மரகதம் குமரவேல் | |
| திமுக | ஐ.பரந்தாமன் | |
| அதிமுக | கணிதா சம்பத் | |
| சிபிஎம் | சுகந்தி | |
| நாம் தமிழர் | ஜானகிராமன் |
| கட்சி | வேட்பாளர் |
| தவெக | சத்தியபாமா |
| திமுக | சுகன்யா |
| அதிமுக | பானுமதி |
| சிபிஐ | லஷ்மணன் |
| நாம் தமிழர் | கார்த்திகா |
இன்னும் இடைத்தேர்தலுக்கு ஒரு வாரக்காலமே இருக்கும் சூழலில், தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ளது. ஏற்கெனவே மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய் பரப்புரை மேற்கொண்ட நிலையில், அடுத்த சில நாட்களில் அவர் தாராபுரம் தொகுதியிலும் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.
அதேபோல் எதிர்க்கட்சிகள் தரப்பில் பிரதான எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டு தொகுதிகளிலும் தவெக அமைச்சர்கள் பலர் முகாமிட்டு பரப்புரை மேற்கொண்டு வரும் அதேவேளையில், திமுக மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சூழலில், மதுராந்தகம் தொகுதியில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேற்றிரவு (செப். 27) பரப்புரை மேற்கொண்டிருந்தார்.
அப்போது பேசிய அவர், இந்த இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெறும்பட்சத்தில் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்வதாகவும், தவெக வெற்றிபெறும்பட்சத்தில் உதயநிதி ஸ்டாலின் அவரது கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்ய முடியுமா என சவால் விடுத்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டு பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "தம்பி, நீ எங்க தலைவர் லெவலுக்கு எல்லாம் பேச வேண்டாம். முதலில் எங்களுக்கு பதில் சொல். நான் இங்கிருந்து சவால் விடுகிறேன். மதுராந்தகம் தொகுதியில் நீ வென்றுவிட்டால், நான் என்னுடைய பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ரிசைன் பண்ணிவிடுகிறேன்" என்றார்.
ஆதவ் அர்ஜுனா தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவில் பொதுச் செயலாளராக செயல்படும் நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் திமுகவின் இளைஞரணி செயலாளராகவும் செயல்படுகிறார்.
மேலும் ஆதவ் அர்ஜுனா, "இன்னும் தேர்தலுக்கு ஒரு வாரம் இருக்கிறது... பிரச்சாரம் பண்றீங்களா... உங்கள் அப்பாவை கூட கூட்டிட்டு வா... ஏன் உங்கள் தாத்தாவை கூட கூட்டிட்டு வா மதுராந்தகத்திற்கு... ஆனால் இளவரசர் உதயநிதி, நீ தோற்றுவிட்டால் உன்னுடைய கட்சிப் பதவி எல்லாத்தையும் ரிசைன் பண்ண நீ ரெடியா...?
முடிந்தால் எங்கள் அண்ணனை (CM விஜய்)மதுராந்தகத்தில் ஜெயித்துக் காட்டுங்கள் என சவால் விடுத்தார். தன்னை பொறுப்பாளராக அண்ணன் போட்டிருக்கார், அக்கா (மரகதம் குமரவேல்) இருக்கிறார், நமது ராஜ்மோகன் இருக்கிறார். எல்லாரும் எளிய வீட்டுப் பிள்ளைகள். நீங்கள்தான் 70 வருட கட்சியாச்சே... நீங்கள்தான் பெரிய ஆலமரமாச்சே... உங்களுக்குதான் அரசியல் தெரியுமே, உங்களுக்குதான் தேர்தல் அரசியல் தெரியுமே, உங்களிடம்தான் பணபலம் இருக்கே!
மதுராந்தகத்தில் தவெகவை விட ஒரே ஒரு கூடுதல் வாங்கிக் காண்பித்துவிட்டால், எங்கள் முதலமைச்சர் விஜய் குறித்து பேசுறதுக்கு வாருங்கள் என்று உதயநிதி ஸ்டாலினை ஆதவ் அர்ஜுனா காட்டமாக சாடினார்.