தெருக்கூத்து மூலம் மக்களை ஈர்த்து, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர், தாமரை. இவர், சமீபத்தில் அமைச்சர் அருண்ராஜ் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதாவது, திருச்செங்கோட்டில் சிறு-குறு வணிகர்களுகளின் ‘எக்ஸ்போ’ நடத்துவதற்கு உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றும், நிகழ்ச்சியை நடத்த விடாமல் தடுப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.
தவெக ஜெயிக்க வேண்டும் என்பதற்காக, தான் தூங்கிகொண்டிருந்தவர்களை கூட எழுப்பி ஓட்டு போட வைத்து, தான் வாக்கு சேகரித்ததாகவும், ஒரு மாதமாக அமைச்சர் அருண்ராஜை சந்திக்க முயற்சி செய்த போதும் அதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
அமைச்சர் அருண்ராஜ்ஜை நம்பித்தான், திருச்செங்கோட்டில் எக்ஸ்போ நடத்த வந்ததாகவும், அங்குள்ள செங்குந்தர் திருமண மண்டபத்தில் எக்ஸ்போ நடத்த, 5-6 முறை முபதிவு செய்ததாகவும் தெரிவித்தார். இருப்பினும் காவல் நிலையத்தில் அனுமதி கிடைக்கவில்லை என்று கூறிய அவர், பெரிய கடைகள் வைத்திருப்பவர்கள், தங்களை எக்ஸ்போ நடத்த விடக்கூடாது என்று புகார் கூறியதாக கூறப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதனால், உயர்நீதிமன்றத்திற்கு சென்று அனுமதி பெற்றதாகவும், அதன் பிறகும் ஒரு மாதமாக அருண்ராஜை சந்திக்க முயன்றதாகவும் கூறினார்.
”எங்களை சந்திக்காமலேயே ‘வேண்டாம், எதுவும் சரியில்லை கேன்சல் செய்து விடுங்கள்’ என்று நீங்கள் சொல்லியதாக தெரிகிறது. நான், 22 வருடங்களாக தெருக்கூத்தாடியாக இருந்தவள். இதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். என்னை போலவே, கஷ்டப்பட்டு, முன்னேற நினைக்கும் பெண்கள், நிறைய பல பேர் இருக்கின்றனர். பலருக்கு நான் இலவசமாக ஸ்டால் கொடுத்திருக்கின்றேன்.
ஒட்டுமொத்தமாக எக்ஸ்போ நடத்தவே கூடாது என்று சொல்வது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. சிறிய உணவு ஸ்டால் வைத்திருப்பவர்களிடமும், தேவையான சான்றிதழ்கள் இருக்கின்றன, பெரிய கடை வைத்திருப்பவர்கள் அரசுக்கு வரி செலுத்துகிறார்கள் என்றால், அவர்கள் மட்டும்தான் வளர வேண்டும் என ஏதேனும் இருக்கிறதா? கீழே இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருபவர்களை அப்படியே உட்கார வைப்பது எந்த வகையில் நியாயம்?” என்று கேட்டிருந்தார்.
தொடர்ந்து பேசிய இவர், “அரசுக்கு வரி செலுத்த வேண்டும், ஒரு ஸ்டாலுக்கு ரூ.1000 கட்டுங்கள் என்று கூறியிருந்தால், கண்டிப்பாக கட்டியிருப்போம். ஆனால் ஒட்டுமொத்தமாக நிகழ்ச்சியே நடக்கக்கூடாது என்று தடுப்பது கடும் வேதனையளிக்கிறது.
அரசியல் ரீதியாகவும் பல்வேறு பிரச்சனைகள் வருகின்றன. ஆனாலும், அமைச்சர் அருண்ராஜ் சார் நிச்சயம் ஆதரவு கொடுப்பார் இதனை நடத்த உதவுவார் என்று முழுமையாக நம்பி இருந்தோம்.
நீங்கள் திருச்செங்கோட்டு மக்களுக்கு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டுக்கே தானே அமைச்சர், எங்களுக்கும் நீங்கள்தானே அமைச்சர்? ஒரே ஒருமுறை மட்டும் எங்களை சந்திக்க அனுமதி கொடுத்திருக்கலாமே?” என்று கேட்டார்.
கடை வைக்க முடியாத பலர் இது போன்ற ஸ்டால்களைத்தான் நம்பியிருப்பதாக கூறினார். கடைசியில், “இவ்வளவு நடந்த பிறகும், என் ஓட்டும், என் குடும்பத்தின் ஓட்டும் தவெகவிற்குதான் இருக்கும். காரணம், விஜய் சாரை எனக்கு மிகவும் பிடிக்கும், அவர் நல்ல மனிதர் எனும் நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” என்று கூறியிருக்கின்றார்.