சென்னை மாநகராட்சி கட்டிட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதி மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் வன்னி அரசு, நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு அரசியல் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்து அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.
இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர், அமைச்சரவையில் மாற்றம் செய்வது முதலமைச்சரின் முடிவுக்கு உட்பட்டது என்று தெரிவித்தார். தாங்கள் கூட்டணியாக ஆட்சியில் இடம்பெற்றுள்ளதாகவும், அமைச்சரவை மாற்றம் தொடர்பாக தங்களிடம் எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை என்ரும் அவர் கூறினார். மேலும், இது போன்ற முடிவுகள் முதலமைச்சர் தலைமையில் எடுக்கப்பட வேண்டியவை என்பதால், இதுகுறித்து தனக்கு எந்த தகவலும் இல்லை என்றும் வன்னி அரசு தெரிவித்தார்.
பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை, அடக்குமுறை மற்றும் பாலின பாகுபாடுகளை தடுப்பதற்கு தொடர்ந்து விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாக அமைச்சர் கூறினார்.
முதலமைச்சர் முன்னெடுத்து வரும் சிங்கப்பெண் திட்டத்தின் கீழ் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை எற்படுத்தும் வகையில் 11 முக்கிய தீர்மானங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அவற்றை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். இந்த தீர்மானங்கள் தொடர்பாக முதலமைச்சரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்படும் எனவும் அவர் கூறினார்.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் பிற்போக்கானது என்ற விமர்சனம் குறித்தும் அமைச்சர் வன்னி அரசு பதிலளித்தார்.
கிராமப்புறங்களில் மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கும் பல குடும்பங்களிடம் இன்றளவும் ஒரு பொட்டு தங்கம் கூட இல்லாத சூழல் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். எனவே இத்திட்டத்தை பிற்போக்கானதாக பார்க்க முடியாது என்றும், பொருளாதார ரீதியாக பிந்தங்கிய குடும்பங்களுக்கு அரசின் ஆதரவாகவே இதை பார்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆதிதிராவிடம் நலத்துறையின் கீழ் செயல்படும் மாணவர் விடுதிகளில் உணவின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து வரும் புகார்கள் தொடர்பாகவும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.
முந்தைய காலங்களை விட தற்போது விடுதிகள் மற்றும் மாணவர்களின் நலன் தொடர்பாக அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருவதாக அவர் தெரிவித்தார். மாணவர்களுக்கான உணவு நிதியும் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், பள்லி மாணவர்களுக்கான தொகை ரூ. 1,400ல் இருந்து ரூ. 1,800 ஆகவும், கல்லூரி மாணவர்களுக்கான தொகை ரூ. 1,500ல் இருந்து ரூ. 2000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
உணவு விநியோகத்தில் முறைகேடு கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாணவர் நலனில் அலட்சியம் காட்டும் விடுதி காப்பாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
வரவிருக்கும் இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து கேட்டபோது, மதசார்பற்ற சமூக நீதி கூட்டணி இந்த தேர்தல்களில் மகத்தான வெற்றி பெறும் என்று அமைச்சர் வன்னி அரசு நம்பிக்கை தெரிவித்தார்.