மிசா குறித்து செய்கை.. எதேச்சையாக தான் செய்தேன்.. CM விஜய் விளக்கம்
CM Vijay Latest News: என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்று முதல்வர் விஜய் விளக்கம் அளித்துள்ளார். நேற்று சட்டமன்றத்தில் பதிலுரையின்போது, முதல்வர் விஜய் உருவக்கேலி செய்ததாக சர்ச்சை எழுந்த நிலையில், அவர் விளக்கம் அளித்துள்ளார்.
CM Vijay Latest News: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கியது. 2026-27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, மானிய கோரிக்கைகள் மீதான விவாதமும் நடந்தது. இந்த நிலையில், சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் நேற்று (செப்டம்பர் 7) காலை பதிலுரை அளித்தார்.
சட்டமன்றத்தில் பதிலுரை
பதிலுரையில் முதல்வர் விஜய் திமுகவை கடுமையாக சாடினார். சர்க்காரியா கமிஷன், மிசா சட்டம், ஊழல் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து திமுகவை கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக, மிசா சட்டம் குறித்து பேசுகையில், ”எது பேசுனாலும், மிசாவை பார்த்தவர்கள் என எல்லாவற்றிற்கும் மிசாவை கொண்டு வந்து விட்டால் என்ன செய்றது என்று தெரியவில்லை.
எல்லாருக்கும் அந்த மிசாவை பற்றிய வரலாறு எல்லாருக்கு தெரியும் என குறிப்பிட்டார். முதல்வர் விஜய் தனது கையை முகத்தின் அருகே தாடைக்கு கொண்டு போய், சைகை ஒன்றை காட்டினார். விசா காலத்தில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். அப்போது, சிறையில் அடைக்கப்பட்ட அவரை போலீசார் கடுமையாக தாக்கினர். குறிப்பாக, அவரது தாடையில் தாக்கினர்.
எனவே, ஸ்டாலினை கேலி செய்யும் விதமாக முதல்வர் விஜய் உருவக்கேலி செய்ததாக சர்ச்சை எழுந்தது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். திமுக, சிபிஐ, சிபிஎம் என பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், முதல்வர் விஜய் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
முதல்வர் விஜய் விளக்கம்
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் முதல்வர் விஜய் குறிப்பிடுகையில், "சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
கடும் எதிர்ப்பு
முதல்வர் விஜய்யின் இந்த செய்கைக்கு கூட்டணியில் இருக்கும சிபிஎம் கடும் கண்டனத்தை பதிவு செய்தது. சிபிஎம் செயலாளர் சண்முகம் கூறுகையில், "அவசரநிலை காலத்தில் முன்னாள் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டு அவரது தாடை உடைக்கப்பட்டது. உருவக் கேலி செய்யும் விதமாக பேசுவது யாராக இருந்தாலும் கண்டனத்திற்குரியது. அதை முதலமைச்சரே செய்திருப்பது பொறுப்பற்ற செயலாகும்.
சட்டமன்றத்தை மக்கள் நலனுக்கு எந்த வகையிலும் எள்ளளவுக்கு கூட உதவாத தனிமனித தாக்குதல்களுக்கான இடமாகவோ அல்லது தங்கள் தலைவரை பாராட்டி பேசும் இடமாகவோ மாற்றுவது முற்றிலும் அறமற்ற செயலாகும். கடுமையான அரசியல் ரீதியான விமர்சனங்களை, அதுவும் கூட நாகரீகமாக சட்டமன்றத்திற்கு வெளியே வைப்பதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்க முடியாது.
ஆனால் ஏழை, எளிய மக்கள் உள்ளிட்ட தமிழக மக்களிடமிருந்து பெறப்பட்ட வரிப்பணத்தில் நடைபெறும் சட்டமன்றத்தின் நேரத்தை மக்கள் நலனுக்காக அன்றி விரயம் செய்வது, அது யாராக இருந்தாலும் அதை ஏற்க முடியாது." என தெரிவித்தார்.