Tamil Nadu government poramboke land electricity Rules: தமிழகத்தில் புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் எளிய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அந்த நிலங்களில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க அரசுத் துறைகளின் தடையில்லாச் சான்று தேவையில்லை என்று தமிழக அரசு வரலாற்றுச் சிறப்புமிக்க அரசாணையைப் பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் அனில் மேஷ்ராம் விரிவான உத்தரவை வெளியிட்டுள்ளார்.
பொதுமக்களின் தொடர் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, புறம்போக்கு நிலங்களில் அதிகபட்சமாக 250 சதுர அடிக்குள் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு மட்டுமே வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகளின் தடையின்மைச் சான்றிதழ் இன்றி வீட்டு உபயோக மின் இணைப்பு வழங்க மின் வாரியத் தலைவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்புகள் குறைந்த அழுத்த மின் கட்டணம் ஐஏ 3 - புறம்போக்கு என்ற தனிப் பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டாலும், சாதாரண வீட்டு உபயோகக் கட்டணமே இதற்கு வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசாணையில் சில குறிப்பிட்ட வகை நிலங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நீர்நிலைகள், மேய்க்கால் நிலங்கள் மற்றும் மந்தை வெளிகள், வனத்துறைக்குச் சொந்தமான இடங்கள், மத்திய அரசுக்குச் சொந்தமான பாதுகாப்பு மற்றும் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகள், ரயில்வே துறையின் எல்லைக்குட்பட்ட நிலங்கள், அனைத்து மத நிறுவனங்களின் பெயரில் உள்ள பட்டா நிலங்கள் மற்றும் கோயில் புறம்போக்கு நிலங்கள் உள்ளிட்ட மேற்கண்ட தடை செய்யப்பட்ட பகுதிகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு இந்த அரசாணை பொருந்தாது என்றும், அவற்றுக்கு மின் இணைப்பு வழங்கப்பட மாட்டாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் இணைப்பு பெற விரும்பும் பயனாளிகள் தமிழ்நாடு மின் பகிர்மான விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள படிவம் 1-ஐப் பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன், படிவம் 6-ன் படி இழப்பீட்டுப் பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும். இத்தகைய இணைப்புகளுக்கு வழக்கமான பாதுகாப்பு வைப்புத் தொகையை விட இரண்டு மடங்கு தொகை வசூலிக்கப்படும். இதர மின் இணைப்புக்கான கட்டணங்கள் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளின்படி விண்ணப்பதாரரிடமிருந்து பெறப்படும்.
விண்ணப்பதாரர்கள் நீதிமன்றம் சாரா முத்திரைத் தாளில் ஒரு பிரமாணப் பத்திரத்தை வழங்க வேண்டும். அதில், அரசுக்கு அந்த நிலம் தேவைப்படும்போதோ அல்லது எதிர்காலத்தில் ஏதேனும் சட்டரீதியான சிக்கல்கள் எழும்போதோ, எவ்வித முன்னறிவிப்புமின்றி மின் இணைப்பு துண்டிக்கப்படுவதை ஏற்றுக்கொள்கிறேன்.
மின் இணைப்பு வழங்கப்படுவதால் மட்டும் அந்த நிலத்தின் மீது எந்தவிதமான நிரந்தர உரிமையோ, முழு உரிமையோ கோர மாட்டேன். நிலத்திலிருந்து வெளியேற்றப்படும் சூழல் ஏற்பட்டால் அதற்கு முழு சம்மதம் தெரிவிக்கிறேன். தாங்கள் குடியிருக்கும் வீடு நீர்நிலை, மேய்க்கால், மந்தை வெளி போன்ற தடைசெய்யப்பட்ட புறம்போக்கு நிலங்களில் அமையவில்லை என்பன போன்ற முக்கிய உறுதிமொழிகள் இடம்பெற வேண்டும்.
புதிய மின் இணைப்பு வழங்குவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட வீடு தடை செய்யப்பட்ட புறம்போக்கு நிலத்தில் அமையவில்லை என்பதை உறுதி செய்ய தமிழ் நிலம் இணைய போர்ட்டல் மூலம் மின்வாரியப் பிரிவு அதிகாரி நேரடியாக ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும். மேலும், இந்தச் சலுகை தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில், தாலுகா மற்றும் மாவட்ட வாரியாக எத்தனை பேருக்கு இத்திட்டத்தின் கீழ் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்ற விரிவான அறிக்கையை மின்வாரியத் தலைவர் 3 மாதங்களுக்கு ஒருமுறை அரசுக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அரசாணையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் பகிர்மான விதிகளின் விதிமுறை 27(12)-ல் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் முறைப்படி தெரிவிக்கப்பட உள்ளது.