Sudarsana Natchiappan Passes Away: முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சுதர்சன நாச்சியப்பன் காலமனார். உடல்நலக்குறைவால் சிவகங்கையில் சுதர்சன நாந்ச்சியப்பன் (78) காலமானார். 1999-2004 காலத்தில் சிவகங்கை எம்பி ஆகவும், 2004 - 2016 ஆண்டுகளில் மாநிலங்களவை எம்பியாகவும் இருந்த அவர், தொழில்துறை இணையமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர் சுதர்சன நாச்சியப்பன். 1969ஆம் ஆண்டு காங்கிரஸ் மூலம் அரசியலி்ல் அடியெடுத்து வைத்தவர் சுதர்சன நாச்சியப்பன். 1969 ஆம் ஆண்டு இந்திரா காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன், சென்னை சட்டக் கல்லூரி மாணவர் காங்கிரஸ் தலைவரானார். 1972ல் சிங்கம்புணரி வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவரான நாச்சியப்பன், அதே ஆண்டில் ராமநாதபுரம் மாவட்ட பொதுச் செயலாளரானார்.
1973 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஆனார். 1974ல் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவரானார். 1975ல் மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளரான நாச்சியப்பன், 1979ல் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவரானார். 1980 முதல் 90 வரை இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளன பொதுச் செயலாளராக இருந்தார்.
1983ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் பொறுப்பு தலைவரான நாச்சியப்பன், 1988ல் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி அமைப்பாளரானார். 1985 முதல் 1990 வரை சிவகங்கை யூனியன் சேர்மனாக இருந்த நாச்சியப்பன், 1991ல் அகில இந்திய காங்கிரஸ் சட்டப்பிரிவு செயற்குழு உறுப்பினரானார். 1999 ஆம் ஆண்டு சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரானார்.
2000 ஆம் ஆண்டில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில மனித உரிமை துறைத் தலைவரானார். 2002ல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி துணைத் தலைவரானார். 2003ல் நாடாளுமன்ற காங்கிரஸ் கொறடாவாக இருந்த நாச்சியப்பன், 2004ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஆனார். 2004 முதல் 2010 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்த நாச்சியப்பன், 2004ல் நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவராகவும் இருந்தார். 2010ல் மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட நாச்சியப்பன் மாநிலங்களவை தலைமை கொறடாவாகவும் செயல்பட்டார்.
நாடாளுமன்ற நிலைக்குழு தலைவராக இருந்தபோது, தகவல் அறியும் உரிமை சட்டம், சொத்தில் பெண்களுக்கு சமஉரிமை சட்டம் கொண்டு வர முக்கிய காரணமாக இருந்தவர் நாச்சியப்பன். காங்கிரஸ் ஆட்சியில் 2013 -14ஆம் ஆண்டில் மன்மோகன் சிங் அமைச்சரவையில் வர்த்தகம், தொழில் துறை இணை அமைச்சராகப் பதவி வகித்தவர். காங்கிரஸில் சேர்ந்து 44 ஆண்டுகளுக்கு பிறகுதான் சுதர்சன நாச்சியப்பனுக்கு மத்திய அமைச்சர் என்ற மகுடம் சூட்டப்பட்டது.