ஓய்வுபெற்ற சத்துணவு பணியாளர்களுக்கு குட் நியூஸ்! ஈமச்சடங்கு நிதியுதவி உயர்வு
Tamil Nadu govt latest update : பணி ஓய்வுக்குப் பின் இறக்கும் சத்துணவுப் பணியாளர்களுக்கு ரூ.20,000 உடனடி நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
Tamil Nadu govt latest update : தமிழ்நாட்டில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பல ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி, பணி ஓய்வு பெற்ற சத்துணவுப் பணியாளர்கள் ஓய்வுக் காலத்தில் உயிரிழக்க நேரிட்டால், அவர்களின் இறுதிச் சடங்கிற்காகக் குடும்பத்தினருக்கு ரூ.20,000 உடனடி நிவாரண நிதி வழங்கத் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை பிறப்பித்துள்ள அரசாணை மூலம் முதற்கட்டமாக ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிதி நிர்வாக நடைமுறைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் உத்தரவு
பள்ளி மாணவர்களின் பசி போக்கி கல்விக்கு உறுதுணையாக நின்ற சத்துணவு ஊழியர்களுக்கு உதவும் நோக்கில், கடந்த பிப்ரவரி 13, 2026 அன்று நிதித் துறையினால் அரசாணை (நிலை) எண் 41 வெளியிடப்பட்டது. அதில், பணி ஓய்வு பெற்ற சத்துணவுப் பணியாளர்கள் மரணமடைந்தால், அவர்களின் இறுதிச் சடங்குச் செலவினங்களுக்காக உடனடி நிவாரணமாக ரூ.20,000 வழங்கப்பட வேண்டும் என ஆணையிடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, சமூக நல இயக்குநர் கடந்த ஜூன் 9 மற்றும் ஜூலை 9 ஆகிய தேதிகளில் அரசுக்கு விரிவான முன்மொழிவுக் கடிதங்களை அனுப்பினார். அதில், நாட்டின் சராசரி இறப்பு விகிதம் 6.5% என்ற அடிப்படையில் கணக்கிட்டால், தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 4,456 ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்கள் பலியாகும் சூழல் உள்ளதாகவும், அவர்களுக்குத் தலா ரூ.20,000 வீதம் வழங்க ஆண்டுக்கு ரூ.8.91 கோடி நிதி தேவைப்படும் என்றும் மதிப்பீடு செய்து அரசுக்குப் பரிந்துரைத்திருந்தார்.
முதல் கட்டமாக ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு
சமூக நல இயக்குநரின் விரிவான கருத்துருவை கவனமுடன் பரிசீலித்த தமிழக அரசு, தற்போது முதற்கட்டமாக 1,500 பயனாளிகளைக் கணக்கில் கொண்டு 3 மூன்று கோடி ரூபாய் மட்டும் நிதி ஒதுக்கீடு செய்து நிர்வாக ரீதியான ஒப்புதலை வழங்கியுள்ளது.
இந்த நிதியானது, உயிரிழந்த சத்துணவு ஊழியரின் குடும்பத்திற்கு இறுதிச் சடங்கிற்கான நடைமுறைகளைச் சிரமமின்றி மேற்கொள்வதற்கு உடனடி ஆதரவாக வழங்கப்படும்.
மேலும், இத்திட்டம் ஒரு புதிய பணியாக கருதப்படுவதால், இதற்கான இறுதி நிதி ஒப்புதல் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் எதிர்வரும் கூட்டத்தொடரில் பெறப்படும். அதுவரை, பணிகளுக்குத் தொய்வு ஏற்படாமல் உடனடியாக நிதியைப் பயனாளிகளுக்கு விடுவிக்கும் வகையில், முதற்கண் தமிழ்நாடு அரசின் எதிர்பாராச் செலவின நிதியிலிருந்து முன்பணம் பெற்று இச்செலவினம் மேற்கொள்ளப்படும். இதற்கான தனி நிதி ஆணைகள் நிதித் துறையினால் தனியாகப் பிறப்பிக்கப்படும்.
சத்துணவு ஊழியர்கள் குடும்பங்களுக்குப் பேருதவி
பல பத்தாண்டுகளாக குறைந்த ஊதியத்திலும், குறைவான சலுகைகளிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு உணவளித்த சத்துணவுப் பணியாளர்களின் உழைப்பிற்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த ஆணை அமைந்துள்ளது. ஆயுள் முழுவதும் அரசுப் பள்ளிகளில் தொண்டாற்றி ஓய்வு பெற்ற பின், முதுமை மற்றும் உடல்நலக்குறைவால் மரணமடையும் மூத்த பணியாளர்களின் இறுதிச் சடங்கிற்குக் கூட நிதிச் சுமையால் தவிக்கும் ஏழைக் குடும்பங்களுக்கு, இந்த ரூ.20,000 நிதி மிகப்பெரிய நிம்மதியையும் உரிய கௌரவத்தையும் பெற்றுத் தரும் என சத்துணவு ஊழியர் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன