Explained: சர்க்காரியா கமிஷன் என்றால் என்ன? இது ஏன் இன்னும் திமுகவை துரத்துகிறது?
Sarkaria Commission Explained: திமுக மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்பேரவையில் முன்வைத்த போது முதலமைச்சர் விஜய் 'சர்க்காரியா கமிஷன்' பற்றி பேசியிருந்தார். அந்த வகையில், சர்க்காரியா கமிஷன் என்றால் என்ன?, ஏன் அது இன்னும் திமுகவை துரத்துகிறது? என்பதையும் இங்கு விரிவாக காணலாம்.
Sarkaria Commission Explained: தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் எப்போதும் திமுகவை தாக்குவதற்கு அனைத்து கட்சிகளாலும் எடுக்கப்படும் முக்கிய ஆயுதம், சர்க்காரியா கமிஷனும்... அதன் விசாரணை அறிக்கையும்...
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி மீது தனக்கு அதிகம் மதிப்பு இருப்பதாக குறிப்பிட்ட முதலமைச்சர் விஜய் கூட இன்று சட்டப்பேரவையில் திமுக மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கியபோது சர்க்காரியா விசாரணை கமிஷன் அறிக்கையை குறிப்பிட்டே பேசினார். சர்க்காரியா கமிஷன் குறித்து முதல்வர் விஜய் பேசியதற்கு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியும் பதிலளித்திருந்தார்.
இந்தச் சூழலில், சர்க்காரியா விசாரணை கமிஷன் என்றால் என்ன?, அது உருவாக்கப்பட்டது ஏன்?, அது சமர்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டவை என்னென்ன?, சர்க்காரியா கமிஷனின் அறிக்கையால் நடந்தது என்ன? உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.
பகுதி 1: சர்க்காரியா விசாரணை கமிஷன் என்றால் என்ன?
- 1971-76 காலகட்டத்தில் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் அமைக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை ஆணையமாகும்.
- சர்க்காரியா கமிஷன் என்பது நீதிமன்றம் அல்ல, அது உண்மை கண்டறியும் ஆணையம் மட்டுமே. இத்தகைய ஆணையங்களுக்கு ஒருவரைக் குற்றவாளி என தீர்ப்பளித்து சிறையில் அடைக்கும் அதிகாரமோ அல்லது நேரடியாக கைது செய்யும் அதிகாரமோ சட்டப்படி கிடையாது.
- ஆணையத்தின் அறிக்கை என்பது அரசுக்கு அளிக்கப்படும் ஆய்வறிக்கை அல்லது பரிந்துரை மட்டும்தான். இதன் அடிப்படையில் தனியாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு காவல்துறை அல்லது சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி தண்டனை பெற்று தர வேண்டும்.
- 1983இல் மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான உறவு குறித்த ஆராய சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டது, அது திமுக பற்றியது அல்ல. 1976இல் அமைக்கப்பட்டது சர்க்காரியா விசாரணை கமிஷன் ஆகும்.
பகுதி 2: சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டதன் பின்னணி
குவிந்த புகார்கள்
- 1972ஆம் ஆண்டில் எம்ஜிஆர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவை தொடங்கிய பின்னர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியை கடுமையாக எதிர்த்தார்.
- அப்போது எம்ஜிஆர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கல்யாணசுந்தரமும் அப்போதைய ஜனாதிபதி வி.வி. கிரியை சந்தித்து திமுக ஆட்சியில் நடந்த ஊழல் புகார்களை சமர்பித்தார். ஜனாதிபதி அதை பிரதமர் இந்திரா காந்தியிடம் அளித்தார்.
*புகைப்படம்: எம்ஜிஆர் & கல்யாண சுந்தரம் - வி.வி. கிரி சந்திப்பு (புகைப்பட உரிமை: வி. வி. கிரியின் கொள்ளுப்பேரன் கிரி சங்கர்/Facebook)
ஆட்சி கலைப்பு
- 1975ஆம் ஆண்டு நாடு முழுவதும் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்தது. திமுக அரசு அதனை தீவிரமாக எதிர்த்தது. கடும் கட்டுப்பாடுகளை தாண்டி பல போராட்டங்களை திமுக முன்னெடுத்தது. இதனால் திமுகவினர் பல இடங்களில் கைது செய்யப்பட்டனர்.
- இதன் விளைவாக, 1976ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி அன்று கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி அரசியலமைப்புப் பிரிவு 356-இன் கீழ் கலைக்கப்பட்டது.
- ஆட்சி கலைக்கப்பட்ட சில நாட்களிலேயே, அதாவது மூன்று நாட்களிலேயே, 1976ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி அன்று ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்த 28 குற்றச்சாட்டுகளை விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சித் சிங் சர்க்காரியா தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
பகுதி 3: திமுக அரசு மீதான குற்றச்சாட்டுகள்
எம்.ஜி.ஆர் மற்றும் கல்யாணசுந்தரம் அளித்த மனுக்களின் அடிப்படையில் ஆணையம் விசாரணை மேற்கொண்டது. அதில் பல குற்றச்சாட்டுகள் முக்கியமானவை.
- வீராணம் குடிநீர்த் திட்டம்: சென்னை நகரத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தொடங்கப்பட்ட திட்டத்தில், தகுதியற்ற சத்யநாராயணா பிரதர்ஸ் நிறுவனத்திற்கு விதிமுறைகளை மீறி ஒப்பந்தம் வழங்கப்பட்டதாகவும், அதில் பல்வேறு நிதி முறைகேடுகள் நடந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
- முறைகேடுகள்: குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்களுக்குச் சலுகை காட்டியது, நில ஒதுக்கீடுகளில் முறைகேடு, கட்சி நிதிக்காக அரசு அதிகாரத்தை பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இருந்தன.
- சமயநல்லூர் அனல் மின் நிலையம்: மதுரையில் இயங்கிவந்த மின் நிலையத்தின் உபகரணங்களை மிக மிக குறைந்த விலைக்கு விற்று அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
பகுதி 4: சர்க்காரியா ஆணையம் அறிக்கை - ஹைலைட்ஸ்
- சர்க்காரியா ஆணையம் 1976ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து 1977ஆம் ஆண்டு மார்ச் மாதம் அதன் முதல் அறிக்கையை தாக்கல் செய்தது. பின்னர் இறுதி அறிக்கைகள் நான்கு தொகுதிகளாக சமர்பிக்கப்பட்டது.
- வீராணம் திட்டம் குறித்து சர்க்காரியா கமிஷன் அதன் அறிக்கையில், முன்கூட்டியே பணி அனுபவம் இல்லாத ஆந்திராவைச் சேர்ந்த சத்யநாராயணா பிரதர்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியதில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நிர்வாக முறைகேடுகள் நிகழ்ந்துள்ளது உறுதியானது என குறிப்பிடப்பட்டுள்ளது.
- சத்யநாராயணா பிரதர்ஸ் நிறுவனம் கருணாநிதியின் மருமகன் முரசொலி மாறனின் நண்பர்களான சத்யநாராயணா சகோதரர்களுடையது. வீராணம் திட்டத்தை அந்நிறுவனத்திற்கு சாதகமாக ஒதுக்கிக் கொடுத்ததால், அதற்கு பிரதிபலனாக முரசொலி கட்டடத்தை சீரமைக்க 59 ஆயிரத்து 202 ரூபாய் முரசொலி மாறனுக்கு அளிக்கப்பட்டது. இதனை மாறன் தரப்பு மறுக்கவில்லை என்றும் அது வணிக ரீதியான பரிவர்த்தனை என்று விளக்கம் அளித்தனர்.
- தகுதியற்ற அந்த நிறுவனத்திற்கு சலுகை காட்டியதில் அப்போதைய பொதுப்பணித்துறை மற்றும் அமைச்சரவை மட்டத்தில் முறைகேடான முடிவுகள் எடுக்கப்பட்டதாக ஆணையம் குறிப்பிட்டது.
பகுதி 5: சர்க்காரியா கமிஷன் அறிக்கைக்கு பின்...
- வீராணம் திட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் விதிமுறை மீறல்களும், அதிகார துஷ்பிரயோகமும் நடந்திருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. ஆனால், கருணாநிதி தனிப்பட்ட முறையில் பணப்பலன் அடைந்தார் அல்லது லஞ்சம் பெற்றார் என்பதற்கான நேரடி ஆவணச் சான்றுகள் இல்லை என்பதையும் நீதிபதி சர்க்காரியா பதிவு செய்தார்.
- இந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் கருணாநிதி இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆதாரங்கள் இல்லாத நிலையில், 1980ஆம் ஆண்டில் அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்பட்டன.
- இந்த காலகட்டத்தில் இந்திரா காங்கிரஸ் உடன் திமுக கைக்கோர்த்ததும் கவனிக்கத்தக்கது. இந்த அறிக்கையால் திமுகவில் இருந்து யாரும் தண்டனைக்குட்படுத்தப்படவில்லை. திமுகவினர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை.
பகுதி 6: திமுகவுக்கு ஏற்பட்ட பின்னடைவுகள்
சர்க்காரியா கமிஷனால் சட்ட ரீதியாக திமுகவினர் பாதிக்கப்படாவிட்டாலும் பல்வேறு பின்னடைவுகளை சந்தித்தது.
தேர்தல் பின்னடைவு
அவசரநிலைக்கு பிறகான இந்த தேர்தலில் திமுகவுக்கு எதிராக வீராணம் பிரச்னையை தனது பிரச்சார ஆயுதமாக எம்ஜிஆர் பயன்படுத்தினார். வீராணம் திட்டத்தில் சாலையில் பதிக்கப்படாமல் உடைந்திருந்த வீராணம் குழாய்களை திமுக ஆட்சியின் ஊழல் சின்னங்களாக அதிமுக முன்வைத்தது.
எம்ஜிஆர் ஆட்சியமைத்த பின்னர் 1989ஆம் ஆண்டில்தான் திமுக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது, 12 ஆண்டுகள் மாநிலத்தில் ஆட்சியமைக்க முடியவில்லை.
விஞ்ஞான ஊழல் என சொல்லப்பட்டதா?
திமுக விஞ்ஞான ஊழல் செய்யும் கட்சி என்ற பெயரும் சர்க்காரியா கமிஷனால் ஏற்பட்டது. இன்றளவும் தமிழக அரசியல் களத்தில் திமுகவை இவ்வாறு விமர்சிக்காத கட்சிகளே இல்லை எனலாம். அதாவது, திமுக மீதான ஊழல்களை 'விஞ்ஞான ஊழல்' என நீதிபதி சர்க்காரியா குறிப்பிட்டதாக கூறப்படுகின்றன, ஆனால் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை.
எந்தவொரு சட்டச் சிக்கலிலோ அல்லது ஆதாரங்களிலோ எளிதில் சிக்காத வகையில், அரசு நடைமுறைகளை வைத்த ஊழல் மேற்கொள்ளப்பட்டதாக நீதிபதி சர்க்காரியா வாய்மொழியாகக் குறிப்பிட்டார் என்ற வாதத்தை அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பரவலாக தங்களின் பிரச்சாரத்தில் பயன்படுத்தின.
இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிக்கையில் விஞ்ஞான ஊழல் என்ற சொல் இடம்பெற்றதற்கான உறுதியான ஆவணப் பதிவுகள் எதுவும் பொதுவெளியில் காணப்படவில்லை.
முடிவுரை
சர்க்காரியா கமிஷன் திமுக அரசு மீது கடுமையான விமர்சனங்கள் மற்றும் பல்வேறு நிர்வாக முறைகேடுகளை சுட்டிக்காட்டியது. ஆனால், நேரடிக் குற்றவியல் பொறுப்பை நிரூபிக்கும் உறுதியான ஆவண ஆதாரங்களை ஆணையத்தின் விசாரணையில் கண்டறியப்படவில்லை. எனவே, திமுக மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஆனால், இன்று வரை தொடர்ச்சியாக திமுக மீது இதுகுறித்த குற்றச்சாட்டுகளை மட்டும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றன.