புது தில்லி: ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக, தமிழகத்தில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த திமுக மற்றும் அதிமுக அரசுகள் ஜவஹர் நவோதயா வித்யாலயாக்களை (Jawahar Navodaya Vidyalaya) அறிமுகப்படுத்துவதை எதிர்த்து வந்துள்ளன. இதனால், இந்தியாவில் ஒரு ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி கூட இல்லாத ஒரே மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. இத்திட்டம் மாநிலத்தின் நீண்டகால 'இருமொழி'க் கொள்கைக்கு முரணானது என்று இந்த அரசாங்கங்கள் தொடர்ந்து வாதிட்டு வருகின்றன.
ஒரு முக்கிய நிகழ்வாக, ஜவஹர் நவோதயா வித்யாலயாக்களை அமைப்பதற்குத் தெரிவித்துள்ள எதிர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக அரசிடம் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமையன்று கேட்டுக்கொண்டது. இந்தி மொழியை முழுமையாக விலக்கி வைக்க முடியாது என்று சுட்டிக்காட்டிய நீதிமன்றம், மாநில அரசும் மத்திய அரசும் பேச்சுவார்த்தை மூலம் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அறிவுறுத்தியது.
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா பள்ளிகளை அமைக்குமாறு மத்திய அரசு ஊத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து மாநில அரசு தொடர்ந்த வழக்கை நீதிபதி பி.வி. நாகரத்னா தலைமையிலான அமர்வு விசாரித்தது.
விசாரணையின்போது, மாநில அரசின் ஆட்சேபனைகள் குறித்து நீதிமன்றம் கேட்டறிந்தது. நவோதயா பள்ளிகளை அமைப்பது மாநிலத்தின் மொழிக் கொள்கைக்கு முரணானது அல்ல என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், இப்பிரச்சினை குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறும் மாநில அரசிடம் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே இச்சச்சரவு பல ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், 2017-ஆம் ஆண்டில் நவோதயா பள்ளிகளை அமைக்க அனுமதிக்குமாறு மாநில அரசிடம் சென்னை உயர் நீதிமன்றம் கேட்டுக்கொண்டிருந்தது.
அப்போது, மாநிலத்தில் தமிழ் ஒரு கட்டாயப் பாடமாகப் பயிற்றுவிக்கப்படுவதாக மாநில அரசு தெரிவித்திருந்தது. மேலும், எட்டாம் வகுப்பு வரை தமிழ் மொழியே பயிற்று மொழியாகப் பயன்படுத்தப்படலாம் என்றும் அது கூறியிருந்தது.
முன்னதாக, மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் ஜவஹர் நவோதயா வித்யாலயாக்களை (JNVs) அமைப்பது தொடர்பாக மத்திய அரசுடன் கலந்தாலோசனைகளை மேற்கொள்ளுமாறு ஜூலை 16 அன்று உச்ச நீதிமன்றம் தமிழக அரசை அறிவுறுத்தியது. நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்தியா ஒரு "கூட்டாட்சி சமூகம்" என்று குறிப்பிட்டது. இவிஷயத்தில் மாநில அரசு முரண்பட்ட அல்லது எதிர்ப்பான அணுகுமுறையைக் கொண்டிருக்கக்கூடாது என்றும் கருத்து தெரிவித்தது.
மத்திய அரசால் நடத்தப்படும் பள்ளிகளான ஜவஹர் நவோதயா வித்யாலயாக்கள் இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடு என்பது நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டபோது, நீதிமன்றம் இவ்வாறு கூறியது:
"உங்கள் மாநிலச் சட்டம் குறித்தும், அது தொடர்பாக நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்பது குறித்தும் மத்திய அரசின் செயலாளர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லுங்கள். தயவுசெய்து ஒரு நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டிருங்கள்."
ஜவஹர் நவோதயா வித்யாலயாக்களில் பின்பற்றப்படும் இந்தி மொழி கற்றல் உள்ளிட்ட 'மும்மொழித் திட்டம்', தமிழகத்தில் பின்பற்றப்படும் 'இருமொழித் கொள்கைக்கு' முரணானது என்று தமிழ்நாடு அரசு வாதிட்டுள்ளது.
மாநில அரசு கட்டாயமாக்கியுள்ள இருமொழித் கொள்கை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) மற்றும் பாடத்திட்டத்தில் இந்தியை விலக்கும் 'தமிழ் கற்றல் சட்டம், 2006' ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதன் காரணமாக, தமிழ்நாடு ஜவஹர் நவோதயா வித்யாலயாக்களை (JNV) எதிர்த்து வருகிறது. ஜே.என்.வி (JNV) அமைப்பின் மும்மொழித் திட்டமானது, மாநிலத்தின் பிராந்திய மொழிப் பாதுகாப்புச் சட்டங்கள் மற்றும் கல்விசார் தன்னாட்சியுடன் நேரடியாக முரண்படுவதாக மாநில அரசு வாதிடுகிறது.