Tamil Nadu Electricity Board Big Announcement: தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பணியின் போது விபத்துக்குள்ளானால் வழங்கப்படும் நிவாரண இழப்பீட்டுத் தொகையை கணிசமாக உயர்த்தி மின்சார வாரியம் அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, பணியின்போது உயிரிழப்பு ஏற்பட்டால் அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இழப்பீடு ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களுக்குத் தடையற்ற, சீரான மின் விநியோகத்தை உறுதி செய்வதற்காகவும், அவசர காலப் பணிகளை மேற்கொள்வதற்காகவும் பதிவு செய்யப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மூலம் ஒப்பந்தப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இயற்கைச் சீற்றங்கள், எதிர்பாராத மின் கசிவுகள் மற்றும் இயந்திரக் கோளாறுகளின் போது உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றும் இந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள், சில நேரங்களில் விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் அல்லது நிரந்தர ஊனம் அடையும் துயர நிலைக்கு ஆளாகின்றனர்.
இத்தகைய விபத்துகளால் பாதிக்கப்படும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்குத் துணையாக நிற்கும் வகையிலும், மனிதாபிமான அடிப்படையிலும் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதனைப் பரிசீலித்த மின்வாரிய நிர்வாகம், ஒப்பந்தப் பணியாளர்களுக்கான இழப்பீட்டைத் துறை சாரா நபர்களுக்கு இணையாக உயர்த்தி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநரின் உத்தரவுப்படி திருத்தப்பட்ட புதிய இழப்பீட்டுத் தொகை விவரங்கள்:
உயிரிழப்பு ஏற்படும் பட்சத்தில்: பணியின் போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு உயிரிழக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு இதுவரை ரூ.5,00,000 வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அது ரூ.10,00,000 (பத்து லட்சம்) ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இரண்டு கைகால்கள் அல்லது இரண்டு கண்களை இழந்தால்: பணியின்போது ஏற்படும் விபத்தினால் இரு கைகள், இரு கால்கள் அல்லது இரு கண்களின் பார்வையை இழக்கும் கடுமையான பாதிப்புக்கு உள்ளானால், இதுவரை வழங்கப்பட்டு வந்த ரூ.2,00,000 இழப்பீடு தற்போது ரூ.3,00,000 (ரூபாய் மூன்று லட்சம்) ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒரு கை அல்லது கால் அல்லது ஒரு கண் இழப்புக்கு: ஒரு கை, ஒரு கால் அல்லது ஒரு கண்ணின் பார்வையை இழக்கும் பட்சத்தில் வழங்கப்பட்டு வந்த ரூ.1,00,000 இழப்பீட்டுத் தொகை தற்போது ரூ.1,50,000 (ரூபாய் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம்) ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த உயர்த்தப்பட்ட புதிய விபத்து நிவாரண இழப்பீட்டுத் தொகையானது 2026 செப்டம்பர் 3 ஆம் தேதி முதலோ அல்லது அதற்குப் பின்னரோ ஏற்படும் விபத்துகளுக்குப் பொருந்தும் என தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட தலைமைப் பொறியாளர்கள் இந்த இழப்பீட்டுத் தொகையை விடுவிப்பதற்கான உரிய அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அபாயகரமான சூழலில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் குடும்பப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, களப் பணியாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.